‘இளங்கோவனுக்கு எதிராக போராட்டம் வேண்டாம்’: ஜெயலலிதா உத்தரவு

சென்னை: ‘தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை இனியும் தொடர வேண்டாம்’ என, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அவரது அறிக்கை: காங்கிரஸ் பற்றியும், தன்னைப் பற்றியும் ஊடகங்களில் தினந்தோறும் செய்திகள் வர வேண்டும் என்பதற்காக, பல்வேறு முறையற்ற கருத்துகளை வெளியிட்டு வரும் இளங்கோவன், என்னை, பிரதமர் மோடி சந்தித்து பேசியதை கொச்சைப்படுத்தி, நாகரிகமற்ற, பண்பாடற்ற மற்றும் கீழ்த்தரமான முறையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் பிரச்னையில், பிரதமருக்கு நான் கடிதம் எழுதுவதை கொச்சைப்படுத்தி, இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில், 2014 ஆகஸ்டில் செய்தி வெளியிடப்பட்ட போது, அதை காங்கிரஸ் உட்பட, அனைத்துக் கட்சிகளும் கண்டித்தன. இதையடுத்து, இலங்கை அரசும் அந்தச் செய்தியை இணையதளத்திலிருந்து எடுத்ததோடு, நாகரிகமற்ற செய்தியை வெளியிட்டதற்கு வருத்தமும் தெரிவித்தது.

இந்நிலையில், நானும், பிரதமரும் சந்தித்ததை அநாகரிகமாக, அருவருக்கத்தக்க வகையில், அரசியல் நாகரிகத்தையே குழிதோண்டி புதைக்கும் விதத்தில், இளங்கோவன் விமர்சித்து இருக்கும் போது, அந்த நாகரிகமற்ற செயலை சில கட்சிகள் ஆதரித்து பேசுவதும், சில கட்சிகள் விமர்சனம் செய்யாமல் இருப்பதும், அவர்களது அரசியல் ஆதாயம் தேடும் நிலையை வெளிப்படுத்துகின்றன. இளங்கோவனின் பேச்சைக் கேட்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், மனம் வெதும்பிய நிலையில், என் மீது அளவற்ற அன்பும், பாசமும், பரிவும் கொண்டுள்ள அ.தி.மு.க., தொண்டர்கள், தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், ‘இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் அறப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க.,வினர் நடத்தும், அறப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்த இளங்கோவன், ‘தன்னுடைய கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டன’ என, சப்பைக்கட்டுகட்டி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதிலிருந்தே இளங்கோவனின் நாகரிகமற்ற செயல் தவறானது என்பதை, அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டது தெளிவாகியுள்ளது.எனவே, அ.தி.மு.க., தொண்டர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி விட்ட நிலையில், இளங்கோவனுக்கு எதிரான போராட்டங்களை, இனியும் தொடர வேண்டாம்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Published by neethiintheerppu

I am editor of NEETHIIN THEERPPU monthly magazine.this is crime

Discover more from Neethiin Theerppu

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading